Sunday, February 24, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்

எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது? எதற்காக வலைப்பதிவாளனாய் உனக்கொரு அவதாரம்? என்ன சாதித்து விட்டாய்? யாரை வாழ வைத்திருக்கிறாய்? யாரெல்லாம் உன்னால் புன்னகையை தத்தெடுத்திருக்கிறார்கள்? உன் வெற்றிகள் என்னென்ன? உன் கண்களின் ஈரத்தைப் பிரதிபலிக்கும் கண்கள் எத்தனை? - இப்படியாய் கேள்விகள் ஜனித்தும், கரைந்தும் கொண்டிருக்கின்றன என்னுள், காற்றினால் நுகரப்படும் நீர்க்குமிழிகளாய்.. பாடுவதைக் காட்டிலும், எழுதுவதில் எனக்கிருந்த ஆர்வத்தைத் தழுவி உச்சி முகர்ந்த எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை திருமதி பிரபாவதி அவர்களை இக்கணம் மானசீகமாய் வணங்குகிறேன்.. உணர்ச்சிகள் பிரவாகமாய் எழும் போது அவற்றை அணையிட்டு வெற்றிக் கொள்ள நானறிந்த சூத்திரங்கள் இரண்டு மட்டுமே - பாடுவதும், எழுதுவதும்.. அவ்வாறான ஒரு உணர்ச்சி உலையில் என் மனது உழன்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை மகளை சரணடைந்தால், உலையில் மேலும் தீயிடுவாளென்பதாலேயே என் மைக்கோலால் மெய்க்கோலமிட முயல்கிறேன்.. மனிதனின் தீர்மானங்கள் எங்கெல்லாம் செல்லுபடியாகிறதோ அங்கெல்லாம் காலத்தின் நொடிமுள் தன்னை மறைத்து மெல்லிதழ்களை மட்டுமே விரித்திருப்பது உறுதி.. எத்தகைய முயற்சியும், காலத்தின் ஒப்புதலின்றி கைக் கூடுவதில்லை... நான் என் கல்லூரி நாட்கள் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களின் செய்து வரும் முயற்சிகள், என்னை தலைக்கனம் கொண்ட ஒரு அறிவிலியாகவே என்னை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன.. கனவுகளின் குவியலாகவே என்னை நான் எப்போதும் எண்ணிக்கொள்வேன்.. கல்லூரி நாட்களில் 2 காற்சட்டைகள் மட்டுமே இருந்தபோதும், கோவிலில் என் தந்தைக்கு அளித்த அந்த வேட்டியை பொய்க்காரணங்கள் சொல்லி எனக்காய்ப் பெற்று எங்கு சென்றாலும் அதையுடுத்தியே சென்ற போதும், நண்பர்கள் நான் வேட்டியிலேயெ பெரும்பாலும் இருப்பதற்கான காரணத்தைக் கேட்ட போது, 'பெரிய மனுஷனாய் வேஷ்டி தான்டா நம்மள காமிக்கும்' என்று அவர்களை  சமாளிக்கும் போதும், எனக்கு எல்லாமுமாயிருந்த என் பாட்டனார் என்னை நீங்கி வானுலகம் சென்ற போதும், கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போன போதும் தற்போது எனக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தொடர் மன அதிர்வை உணர்ந்ததில்லை.. இப்போது தான் காலத்தின் வீரியத்தை நான் உணரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.. இதுவரையில் நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், என் காற்சுவடுகள் முழுதாய் எனக்கு புலப்படவில்லை.. அங்கொன்றும், இங்கொன்றுமாய் என் காற்சுவடுகள்.. மற்றவை எல்லாம் என் வாழ்வை அழகாக்க வந்த தேவதைகளினுடையவை.. எவ்வளவு விஷயங்களை பக்குவமாய் என்னை உணரவைத்திருக்கிறார்கள் அவர்கள்.. எனக்குள் நானே அறியாமல் உரமிட்டு வளர்த்து வைத்திருந்த செறுக்கெனும் களைப் பயிர்களை, என் வாழ்வில் அவர்கள் ஒவ்வொருவரின் பாத்திரம் முடியும் போதும் பறித்தழிக்கத் தவறியதில்லை.. என் நிறைகளை அனுசரித்து, குறைகளை அவர்கள் அங்கலாய்த்த போதெல்லாம் அவர்களுக்கு செவிமெடுக்காத நான், அவர்களால் உண்டான வெறுமையை இன்றளவும் சிறை பிடித்து, என்னிதயக் கூட்டில் பூஜித்து வருகிறேன்..ஏனோ தெரியவில்லை இப்பதிவை கோர்க்குமிக்கணத்தில், உடல் வியர்த்து, கண்கள் பனித்து, ஒருவிதமான ஒவ்வாத நிலை என்னை கவ்வியுள்ளது.. எனக்கெதிரான சில விமர்சனங்கள், என்னை இவற்றை அசைபோட வைத்ததாய் நான் நினைத்தாலும், அவ்விமர்சனங்களையும் மீறி அவற்றுள் நிறைந்துள்ள நிதர்சனங்கள் என்னை உறுத்தவே செய்கின்றன.. என்னை இதுவரையில் சரியாகவே நான் முன்னிறுத்தவில்லையென்று புரிகிறது.. எவ்வளவோ வசவுகள் என்மீது சாட்டையாய் முத்தமிட்டபோதும் கலங்காத என் கண்கள், இன்று மாறிவிட்ட காட்சிகளால் என்மீது வைக்கப்பட்டுள்ள சில முறையீடுகளால் செந்நீரை வடித்துக் கொண்டிருக்கிறது.. வெற்றிடங்களை மட்டுமே பூஜித்து வந்த எனக்கு, அவற்றில் குறிப்பாய் விடப்பட்டுள்ள விஷயங்களை உணர முடியவில்லை.. தத்துவங்கள் எப்போதுமே மனிதனுக்கு உதவியதில்லை நிஜத்தில்.. பிரச்சினைகளின் மூலத்தை கண்காண விடாமல், வேறு பாதையில் கடத்துவதே ஒரு தத்துவ ஞானியின் கைதேர்ந்த வேலை.. எனக்கான பிரச்சினைகளின் தீர்வுகள், நான் மட்டுமே அறிந்த ரகசியங்கள்.. எனக்கான காலம் கனிந்து சமீபத்துக் கொண்டிருக்கிறது.. எனக்கான வெற்றி என்னவென்பதை என் மனம் மட்டுமே வரையறுக்கும்.. அதுவே என் பிறப்பின் நோக்கம்.. என் வெற்றிகள் என்னுள் புதைந்து போக நான் ஒரு போதும் அனுமதிய மாட்டேன்.. எனக்கான இடையூறுகள் காலத்தால் எனக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைச் சட்டங்கள்.. இலக்கை அறிவதைவிட இத்தடைகளை தாண்டிச் செல்வதில் தான் எத்தனை திருப்தி.. என்னை முற்றுமாய் அறிந்தவர்கள், என்றும் என்னை விட்டு விலகுவதில்லை.. ஒவ்வொரு தடைச்சட்டத்தை நான் தாண்ட முயற்சிக்கும் போதும், என் பலத்தை எனக்கு ஊக்கத்தால் உணர வைப்பவர்கள் இவர்கள் தான்.. எண்ணிக்கையில் விரலளவாயினும், அவ்வூக்கம் வானளவு... ஒரு புதிய அவா என்னுள் மேலோங்கி நிற்கிறது இன்று.. நான் நானாய் இருந்த காரணத்தால், சந்தர்ப்ப வசப்பட்டும், காலத்தின் கண்பட்டும் எனக்கு அந்நியமாகிப் போனவர்கள் ஏதோ ஒரு உந்துதலால் என் வட்டத்துக்குள் வந்து சேர்ந்து, மனதின் அறைகளில் அவர்கள் நிரப்பித்த வெற்றிடத்தை, அவர்களே கரைக்கவேண்டும்.. நீட்டித்த கனவின் நிஜத்தில் இன்னுமொரு கனவு.. அதற்குப் பலவண்ணப் பூச்சிடக் காலத்தின் தூரிகையைத் தேடி இன்னுமொருப் பயணம்..

- இன்னும் துடிக்கும்..

Tuesday, August 9, 2011

கிருஷ்ணா வந்தாச்சு..

விழியோரம் ஈரம் வந்து குடை கேட்கவே செய்து, அந்த ஈரம் தொடர் மழையாக இன்றளவும் நிலைத்துள்ளது 'தெய்வத் திருமகள்' என்ற அந்த உணர்வுபூர்வமான படைப்பை பார்த்திருக்கக் கூடாதோ என்று தோன்றுமளவு... நேர்மையான படைப்புகள் தமிழ் திரையுலகை ஆக்கிரமிக்கும் காலம் வெகு சமீபம் என்பதை அச்சாரமிட வெளிவந்துள்ளது இத்திரைப்படம்.. I am Sam என்ற ஆங்கில படைப்பின் தழுவலாக இருப்பினும், பாத்திரப் படைப்பு, திரைக்கதை, இசை, நடிப்பு, வசனம் என்று எல்லாத் துறைகளிலும் வென்று மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறாள் இந்த தெய்வத் திருமகள்.. நுணுக்கமாகக் கையாளப்பட்டு, அற்புதமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் 'கிருஷ்ணா' என்ற மன நலம் குன்றிய கதையின் பாத்திரம் மனதில் மிகப் பெரிய பிரளையத்தையே ஏற்படுத்தும்.. மிகச் சாதாரணமான சில காட்சிகளைக் கொண்டு வானளாவிய தத்துவங்களை யதார்த்தமாய் சலிக்காமல் அளித்ததற்கு இயக்குநர் அழகப்பன் விஜயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.. தன் மனைவி காலமானதை உணரமுடியாத கிருஷ்ணா, அவள் தனக்காய் விட்டுச் சென்ற அந்த குழந்தையை வளர்க்க முயல்வதை காட்டும் காட்சியிலிருந்து இசையமைப்பாளர் கோலோச்ச ஆரம்பித்து விடுகிறார்.. கைகுழந்தையாய் நிலா அழும் காட்சியில், குழந்தை அழுதால் என்ன செய்வதென்று அப்பாவியாய் கிருஷ்ணா கேட்கும் காட்சியில், 'வெண்ணிலவே' என்று நா.முத்து குமாரின் வரிகளில், ஜி.வி.பிரகாஷின் குரலில் தொடங்கும் அந்தப் பாடல், துணையை இழந்து தவிக்கும் ஒரு உள்ளத்தின் அழுகுரலாய் எதிரொலிக்கிறது.. நிலாவிற்கு காலணி வாங்க கிருஷ்ணா மற்றும் நண்பர்கள் செய்யும் கலாட்டாக்கள் மத்தாப்பு ரகம்.. கடைக்காரரிடம் கொடுக்க பணம் குறைய, நண்பர்கள் படை தங்களிடம் இருப்பதை சேர்த்துக் கடைக்காரரிடம் கொடுப்பது மனதில பூச்சாரலைத் தூவுகிறது.. பின்னர் வளிக்கூண்டுகளை கைகளில் பிடித்துக் கொண்டு அவர்கள் அனைவரும் நடந்து செல்வது, தேவதைகளின் அணிவகுப்பு.. நிலா பள்ளியிலிர்ந்து வீடு திரும்ப தாமதமாக, கிருஷ்ணா பதறி எங்கெங்கோ அலைந்து கடைசியில் நிலாவைக் கண்டு தன் பரிதவிப்பை வெளிப்படுத்தியதும், நிலா தன் தந்தையிடம் தன்னிடம் பேச நினைப்பதை வானின் நிலாவிடம் கூறுமாறும், அந்நிலா தன்னிடம் அதை கூறிவிடும் என்று வாஞ்சையுடன் கூறும் காட்சி கொஹினூர் வைரம்.. கடைசியில் வரும் அந்த நீதிமன்ற காட்சியில், வார்த்தைகளை பிரயோகிக்காமல் வெறும் சைகைகளையும், இசையையும் துணை கொண்டு, இதயங்களில் கன்னக்கோலிட்டு விடுகிறது இக்கூட்டணி.. அழுத்தமான விஷயங்களை, மெல்லிய காட்சியமைப்புகளின் மூலம் லாவகமாக சொல்லிருப்பது இதயத்தின் அறைகளில் வண்ணங்களை தீட்டி விடுகிறது.. தலையில் வெகு நாட்களாய் தங்கியிருந்த ஆணவத்தை, தெய்வத் திருமகள் காலின் கீழ் போட்டு மிதித்து விட்டாள்; உடலின் அவையங்களில் ஆங்காங்கு தேங்கிப் போயிருந்த, மனிதத்தன்மைக்கு எதிரான கறைகளை கண்ணீரால் நீக்கி விட்டாள்; உலகியல் வாழ்வில், நம்மில் மறைத்து வைத்த பாசத்தின் விதையை தேடி, அதை நீரூற்றி வளர்த்து பூக்களை நமக்கு கொடுத்து விட்டாள்.. என்னால் முயன்ற வரை நான் உணர்ந்தவற்றை இங்கு பதித்திருக்கிறேன்.. மிகப்பெரிய பாதிப்பிற்குட்பட்டு நிழலா, நிஜமா என்ற போராட்டத்தில் இருக்கிறேன் இச்சமயம்.. உலகின் துன்பங்களுக்கெல்லாம் மூலமே அறிவு சார்ந்த விஷயங்கள் தான் என்று மீண்டுமொரு முறை உணர்கிறேன்.. தொலைத்த சொந்தங்களை, சிதைந்த நட்புறவை, மறந்த மனிதர்களை இன்று முதல் உயிர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.. சில சங்கடங்களை சந்தித்தே ஆக வேண்டும்.. இதயத்தில் உற்பத்தியாகும் உண்மையான அன்பிற்கு முன் இமயமும் மண்டியிடுமல்லவா?? கிருஷ்ணா வந்தாச்சு, கம்ச ந்ரகாசுர எண்ணங்கள் போயாச்சு.. பாடகனாய், தொழிலதிபனாய், நாட்டியக்காரனாய், எழுத்தாளனாய் - எதுவாகவும் இல்லாமல் மனிதனாய் முதலில் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் புதிதாய் என் வாழ்வை தொடங்குகிறேன்..

- இன்னும் துடிக்கும்..

Saturday, July 16, 2011

வானமே எல்லை..

சதாசிவ பிரமேந்திரருக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளை நல்கி இந்த பதிப்பை தொடங்குகிறேன்.. 'பிபரே ராம ரசம்' என்ற அவருடைய அந்த வடமொழிப் பாடலின் பொருளுணர்ந்து உண்மையில் வெட்கி, இது போன்று பகதியை நான் கொண்டிருக்கவில்லையே எனக் கூனிக்குறுகுகிறேன்.. அந்தப் பாடலின் சரத்தை அழகாய் ஊற்றிக் கொடுத்த பாடகர் கார்த்திக் எல்லா வளங்களும் பெற்று வாழ என் பிரார்த்தனைகள்.. கிட்டத்தட்ட 4 மாதங்கள் உலையாய் கொதித்துக் கொண்டிருந்த என் உள்ளத்தையும், உணர்வுகளையும் பாலாவின் 'அவன் இவன்' மேலும் எரிமலையின் அடிக்குழம்பாய் மாற்றியது.. மன அழுத்தங்கள் அவ்வப்போது அரிய விஷயங்களை அடிக்கொடிட்டு காட்டத் தவறுவதில்லை.. அவ்வாறாய் நான் கடந்த 4 மாதங்களாய் கருவாய் சுமந்த மன வலி, இன்று இப்பாடலைக் கேட்டதுமே மணம் வீசி புதியதோர் மலராய் பரிமணித்திருக்கிறது.. பக்தி என்பது நேர்மையின் உயரிய நிலை.. தினம் முகங் காணும் மனிதர்களிடமே நம்மால் முகப்பூச்சில்லாமல் இருக்க முடியாத போது, உணர மட்டுமே முடியக்கூடிய, இருப்பு நிரூபிக்கப்படாத ஒரு மூலத்திடம் ஊனையும், உயிரையும் சமர்ப்பித்து உண்மையுடனும், நேர்மையுடனும் வாழ்ந்த மகான்களை நினைக்கும் வேளையிலேயே தீயில் குளித்தது போன்று உள்ளது.. நம் எண்ணங்களைப் போன்ற மகத்தான ஆயுதங்கள் இன்றளவுமில்லை.. சிறகுகள் புதிதாய் முளைத்ததாய் உணர்கிறேன் இச்சமயம்... பள்ளி படிப்பை முடித்து, பல்வேறு கனவுகளுடன் பட்டாம்பூச்சிக் கூட்டத்தில் நான் நுழைந்த அந்த நாள் மீண்டும் இன்று எனக்காய் உதித்ததாகவே தோன்றுகிறது.. இக்கணம் என் மன ஓட்டங்களுக்கு வானமே எல்லை.. அதே துடிப்புடன் நான் என் மனச் சுவற்றில் வரைந்த ஓவியங்களை எழுத்துக்களாய் இனி இங்கு வழங்குவேன்.. நிலவின் பால் வெண்மையை ரசிக்கும் நீங்கள், அதன் மறுபுறம் இழையும் நிழலின் பிரதிபலிப்பான கருமையை நினைத்து நிலவை வெறுப்பதில்லை.. அதுபோல் இதுவரை அறியப்படாத என்னை உங்களுக்கு இனி இங்கு நான் அறிமுகப்படுத்தப் போவதால் வெறுக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்..


- இன்னும் துடிக்கும்..

Sunday, February 6, 2011

மகரந்த மெத்தை...


கடந்த சில நாட்களாய் உரு போடப்பட்ட எண்ணங்கள் மீண்டும் எழுத்துக்களாய் இங்கே.. உணர்வுகளால் உந்தப்பட்டு எதிலுமே மனம் லயிக்காத அந்த நிலையை ஒரு வார காலம் போராடி பணிய வைத்துவிட்டேன்.. எனக்கு எழுதுவதில் உள்ள நாட்டம் வேறெதிலும் இருந்ததிலலை.. சூழ்நிலை கருதி நாம் காத்த மௌனங்களை எழுத்தில் வார்க்க தமிழை விட ஒரு சிறந்த மொழி நானறிந்த வரையில் இல்லை.. எனவே என் தாயளித்த தமிழிலேயே இந்த வலைப்பதிவை பதிக்க ஆசைக் கொண்டு எழுதுகிறேன்.. நிலம் தொட்ட நாள் முதல் இது நாள் வரையில் நான் பயணித்த பாதையில் கண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. சில சம்பவங்கள் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கலாம்... சில உங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கலாம்.. என் எழுத்துக்கள் உங்களுக்கு ஏதோ வகையில் நன்மை பயக்குமெனில் மெத்த மகிழ்ச்சியடைவேன்.. எந்த விஷயத்தை எடுத்தாலும் மனமூன்றி செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் கொண்டவன் நான்.. நமக்காக நாம் செய்யும் எந்த ஒரு செயலிலும் உண்மையும், நேர்மையும் இருந்தால் மட்டுமே மற்றவரிடத்திலும் நாம் அவற்றை எதிர் பார்க்கமுடியும்.. அந்த வகையில் நிறைய சந்தர்ப்பங்களில் நாம் நம் உணர்ச்சிகளை விற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. தனிமையில் நாம் அதற்காக வருந்தினாலும், வாழ்க்கையின் சுழலில் நாம் அனைவரும் நடிகர்களே.. இல்லையென யாராலும் மறுக்கவே முடியாத தீர்க்கமான உண்மை இது.. தாயின் கருவில் உதிக்கும் போதே நமக்கான பயண அட்டவணை குறிக்கப்பட்டு விடுகிறது.. என் வாழ்விலும் நான் எதிரேபாராத ஏற்ற இறக்கங்கள்.. இறக்கங்கள் ஏற்றங்களை மிஞ்சி பீடு நடை போடும் போது, உண்மையில் வாழ்வில் பிடி கொஞ்சம் தளரவே செய்கிறது.. இரவில் பஞ்சணையின் அரவணைப்பில் உறங்க வேண்டிய உள்ளம், விடியாத பொழுதுக்கான கவலையில் மூழ்க ஆரம்பித்து விடுகிறது.. இயந்திரத்தனம் நிறைந்த வாழ்க்கையில், எல்லோருடனும் சிரித்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. ஒருவர் மேலுள்ள காழ்ப்புணர்வு துணில் சிம்மம் போலவும்; சிலையில் தேரைப் போலவும் நமக்கே தெரியாமல் வளரவே செய்கிறது.. இதை நாம் உணர்ந்து முளையிலேயே கிள்ளியிருந்தால், உலக வரலாற்றில் போர் முரசுகள் எகத்தாளமிட்டிருக்காது..நாம் தினம் நம் வாழ்க்கை பயணத்தில் மனதிற்கு ஒப்பாத விஷயங்களை கண்டு ஜீரணிக்க ஜீரணிக்க, நம் அவையங்களையும் ஒரு நாள் ஜீரணித்து ஏப்பம் விடக்கூடும்.. இவற்றையெல்லாம் நான் சம்பந்தமேயில்லாமல் இங்கு பிதற்றுவதாக நீங்கள் நினைக்கக் கூடும்.. நான் இங்கு எனக்காகவே வாழ விரும்புகிறேன்.. நான் உண்மையில் உணர்ந்தவற்றை இங்கு கூறுகிறேன்.. வலியறியாது; சுவையறியாது; கபடமறியாது; சூதறியாது நான் 10 மாதங்கள் வசித்து வந்த என் தாயின் கருவறை வாசம் மீண்டும் எனக்காய் வேண்டும்.. அங்கே நான் போலியாய் சிரித்ததில்லை; புறம் பேசியதில்லை; மனிதனாய் வாழ்ந்ததில்லை; உண்மையை மறைத்ததில்லை; உணர்வுகளை விற்றதில்லை.. ஒவ்வொருவரின் ஆதி கால சொர்க்க வாழ்வின் விலாசம் - தாயின் கருவறை - ஒரு மனிதனின் மகரந்த மெத்தை..

இன்னும் துடிக்கும்...

Monday, January 24, 2011

இப்படிக்கு நான்..


கணினியைக் கண்டு அது எட்டாக்கனி என்று நான் மலைத்த நாட்கள் இன்றும் பசுமையாய் என்னுள்.. என் வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மிகவும் ரசித்து வாழ்ந்த நாட்களாய் அவற்றை அடிக் கோடிடலாம்.. எவ்வித முகப்பூச்சும், முகாந்திரமும் இல்லாமல் என் வாழ்க்கையை எனக்காய் நானே வாழ்ந்த நாட்கள்.. பள்ளிக்கூடம் முடிந்ததும், சக நண்பர்களுக்காய் தெருவோரம் காத்திருந்த நிமிடங்கள்; அப்பருவத்திற்கேயுரிய துடிப்புடன், கடந்து செல்லும் மற்ற வகுப்பு மாணவிகளுக்கு நண்பர்களுடன் நானிட்ட மதிப்பெண்கள்; பாசமாய் தாத்தா கொடுத்த காசில் நான் மட்டும் உண்ணாமல் வேளச்சேரி பஸ் ஏற காத்திருக்கும் என் பள்ளித் தோழர்களுடனும், அங்கு தவறாமல் அந்நேரத்தில் ஆஜராகும் அந்த கருப்பு நிற நாய் குட்டியுடனும் சேர்ந்துண்ட ஐயங்கார் வெப்பகத்து பஃப்ஸ்; வீடு சேர்ந்து உடை மாற்றி தெருவில் நண்பர்களுடன் நான் விளையாடிய 5-ஓவர் கிரிக்கெட் ஆட்டங்கள்; வாக்மேனில் பாடல்கள் கேட்டு மேடையில் நிற்பதாய் எண்ணி, பக்கத்தில் படுத்திருக்கும் அப்பா எழுந்து விடக்கூடாதென மெல்லிய குரலில் நடுநிசியில் நான் பாடிய பாடல்கள்; கல்லூரிக் காலத்தில் என்னிடம் ட்யூஷன் பயின்ற பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் நான் பெற்ற பாராட்டுக்கள் - இப்படி எத்தனையோ விஷயங்களை தொலைத்து விட்டு இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்..விஞ்ஞான விந்தையால் இழந்த இவற்றை எந்த சந்தையில் சென்று வாங்குவது?? வெகு நாட்களாய் எனக்குள் பதியம் போட்டு நான் வளர்த்த தோட்டம் - அதில் முட்களாய் சில நினைவுகள் அவ்வப்போது தைத்து; மலர்களாய் சில உறவுகள் ஆங்காங்கே பூத்து கடைசியில் எழுத்துக்களாய் இங்கு வாழ வழி தேடி வந்துள்ளன.. பிராயத்தில் நான் ஆடிய கோலியாட்டம் முதல் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கும் 2G ஒலிக்கற்றலை உரிமம் ஒதுக்கீட்டு ஒழுங்கீனம் வரை அனைத்தையும் எவ்வித பசப்புகளயும் தூவாமல் இங்கே உங்களுடன் அலச வருகிறேன்.. இயற்கையளித்த வரங்கள் நானிசைக்கும் ஸவரங்கள்... அதில் நான் மாறுபட்டு நிற்க வழியில்லை.. கவிச் சோலை படைக்க தமிழில் எனக்கு ஞானமில்லை.. நான் இதற்கு முன் தொடங்கிய எவ்விரு வலைப் பதிவுகளையும் போல் இல்லாமல் இது எப்பொழுதும் உயிர்த்துடிப்புடன் இருக்கும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் என் முகவுரையை முடிக்கிறேன்..

இப்படிக்கு,
நான்..