
கணினியைக் கண்டு அது எட்டாக்கனி என்று நான் மலைத்த நாட்கள் இன்றும் பசுமையாய் என்னுள்.. என் வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மிகவும் ரசித்து வாழ்ந்த நாட்களாய் அவற்றை அடிக் கோடிடலாம்.. எவ்வித முகப்பூச்சும், முகாந்திரமும் இல்லாமல் என் வாழ்க்கையை எனக்காய் நானே வாழ்ந்த நாட்கள்.. பள்ளிக்கூடம் முடிந்ததும், சக நண்பர்களுக்காய் தெருவோரம் காத்திருந்த நிமிடங்கள்; அப்பருவத்திற்கேயுரிய துடிப்புடன், கடந்து செல்லும் மற்ற வகுப்பு மாணவிகளுக்கு நண்பர்களுடன் நானிட்ட மதிப்பெண்கள்; பாசமாய் தாத்தா கொடுத்த காசில் நான் மட்டும் உண்ணாமல் வேளச்சேரி பஸ் ஏற காத்திருக்கும் என் பள்ளித் தோழர்களுடனும், அங்கு தவறாமல் அந்நேரத்தில் ஆஜராகும் அந்த கருப்பு நிற நாய் குட்டியுடனும் சேர்ந்துண்ட ஐயங்கார் வெப்பகத்து பஃப்ஸ்; வீடு சேர்ந்து உடை மாற்றி தெருவில் நண்பர்களுடன் நான் விளையாடிய 5-ஓவர் கிரிக்கெட் ஆட்டங்கள்; வாக்மேனில் பாடல்கள் கேட்டு மேடையில் நிற்பதாய் எண்ணி, பக்கத்தில் படுத்திருக்கும் அப்பா எழுந்து விடக்கூடாதென மெல்லிய குரலில் நடுநிசியில் நான் பாடிய பாடல்கள்; கல்லூரிக் காலத்தில் என்னிடம் ட்யூஷன் பயின்ற பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் நான் பெற்ற பாராட்டுக்கள் - இப்படி எத்தனையோ விஷயங்களை தொலைத்து விட்டு இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்..விஞ்ஞான விந்தையால் இழந்த இவற்றை எந்த சந்தையில் சென்று வாங்குவது?? வெகு நாட்களாய் எனக்குள் பதியம் போட்டு நான் வளர்த்த தோட்டம் - அதில் முட்களாய் சில நினைவுகள் அவ்வப்போது தைத்து; மலர்களாய் சில உறவுகள் ஆங்காங்கே பூத்து கடைசியில் எழுத்துக்களாய் இங்கு வாழ வழி தேடி வந்துள்ளன.. பிராயத்தில் நான் ஆடிய கோலியாட்டம் முதல் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கும் 2G ஒலிக்கற்றலை உரிமம் ஒதுக்கீட்டு ஒழுங்கீனம் வரை அனைத்தையும் எவ்வித பசப்புகளயும் தூவாமல் இங்கே உங்களுடன் அலச வருகிறேன்.. இயற்கையளித்த வரங்கள் நானிசைக்கும் ஸவரங்கள்... அதில் நான் மாறுபட்டு நிற்க வழியில்லை.. கவிச் சோலை படைக்க தமிழில் எனக்கு ஞானமில்லை.. நான் இதற்கு முன் தொடங்கிய எவ்விரு வலைப் பதிவுகளையும் போல் இல்லாமல் இது எப்பொழுதும் உயிர்த்துடிப்புடன் இருக்கும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் என் முகவுரையை முடிக்கிறேன்..
இப்படிக்கு,
நான்..