சதாசிவ பிரமேந்திரருக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளை நல்கி இந்த பதிப்பை தொடங்குகிறேன்.. 'பிபரே ராம ரசம்' என்ற அவருடைய அந்த வடமொழிப் பாடலின் பொருளுணர்ந்து உண்மையில் வெட்கி, இது போன்று பகதியை நான் கொண்டிருக்கவில்லையே எனக் கூனிக்குறுகுகிறேன்.. அந்தப் பாடலின் சரத்தை அழகாய் ஊற்றிக் கொடுத்த பாடகர் கார்த்திக் எல்லா வளங்களும் பெற்று வாழ என் பிரார்த்தனைகள்.. கிட்டத்தட்ட 4 மாதங்கள் உலையாய் கொதித்துக் கொண்டிருந்த என் உள்ளத்தையும், உணர்வுகளையும் பாலாவின் 'அவன் இவன்' மேலும் எரிமலையின் அடிக்குழம்பாய் மாற்றியது.. மன அழுத்தங்கள் அவ்வப்போது அரிய விஷயங்களை அடிக்கொடிட்டு காட்டத் தவறுவதில்லை.. அவ்வாறாய் நான் கடந்த 4 மாதங்களாய் கருவாய் சுமந்த மன வலி, இன்று இப்பாடலைக் கேட்டதுமே மணம் வீசி புதியதோர் மலராய் பரிமணித்திருக்கிறது.. பக்தி என்பது நேர்மையின் உயரிய நிலை.. தினம் முகங் காணும் மனிதர்களிடமே நம்மால் முகப்பூச்சில்லாமல் இருக்க முடியாத போது, உணர மட்டுமே முடியக்கூடிய, இருப்பு நிரூபிக்கப்படாத ஒரு மூலத்திடம் ஊனையும், உயிரையும் சமர்ப்பித்து உண்மையுடனும், நேர்மையுடனும் வாழ்ந்த மகான்களை நினைக்கும் வேளையிலேயே தீயில் குளித்தது போன்று உள்ளது.. நம் எண்ணங்களைப் போன்ற மகத்தான ஆயுதங்கள் இன்றளவுமில்லை.. சிறகுகள் புதிதாய் முளைத்ததாய் உணர்கிறேன் இச்சமயம்... பள்ளி படிப்பை முடித்து, பல்வேறு கனவுகளுடன் பட்டாம்பூச்சிக் கூட்டத்தில் நான் நுழைந்த அந்த நாள் மீண்டும் இன்று எனக்காய் உதித்ததாகவே தோன்றுகிறது.. இக்கணம் என் மன ஓட்டங்களுக்கு வானமே எல்லை.. அதே துடிப்புடன் நான் என் மனச் சுவற்றில் வரைந்த ஓவியங்களை எழுத்துக்களாய் இனி இங்கு வழங்குவேன்.. நிலவின் பால் வெண்மையை ரசிக்கும் நீங்கள், அதன் மறுபுறம் இழையும் நிழலின் பிரதிபலிப்பான கருமையை நினைத்து நிலவை வெறுப்பதில்லை.. அதுபோல் இதுவரை அறியப்படாத என்னை உங்களுக்கு இனி இங்கு நான் அறிமுகப்படுத்தப் போவதால் வெறுக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.. - இன்னும் துடிக்கும்..