Tuesday, August 9, 2011

கிருஷ்ணா வந்தாச்சு..

விழியோரம் ஈரம் வந்து குடை கேட்கவே செய்து, அந்த ஈரம் தொடர் மழையாக இன்றளவும் நிலைத்துள்ளது 'தெய்வத் திருமகள்' என்ற அந்த உணர்வுபூர்வமான படைப்பை பார்த்திருக்கக் கூடாதோ என்று தோன்றுமளவு... நேர்மையான படைப்புகள் தமிழ் திரையுலகை ஆக்கிரமிக்கும் காலம் வெகு சமீபம் என்பதை அச்சாரமிட வெளிவந்துள்ளது இத்திரைப்படம்.. I am Sam என்ற ஆங்கில படைப்பின் தழுவலாக இருப்பினும், பாத்திரப் படைப்பு, திரைக்கதை, இசை, நடிப்பு, வசனம் என்று எல்லாத் துறைகளிலும் வென்று மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறாள் இந்த தெய்வத் திருமகள்.. நுணுக்கமாகக் கையாளப்பட்டு, அற்புதமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் 'கிருஷ்ணா' என்ற மன நலம் குன்றிய கதையின் பாத்திரம் மனதில் மிகப் பெரிய பிரளையத்தையே ஏற்படுத்தும்.. மிகச் சாதாரணமான சில காட்சிகளைக் கொண்டு வானளாவிய தத்துவங்களை யதார்த்தமாய் சலிக்காமல் அளித்ததற்கு இயக்குநர் அழகப்பன் விஜயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.. தன் மனைவி காலமானதை உணரமுடியாத கிருஷ்ணா, அவள் தனக்காய் விட்டுச் சென்ற அந்த குழந்தையை வளர்க்க முயல்வதை காட்டும் காட்சியிலிருந்து இசையமைப்பாளர் கோலோச்ச ஆரம்பித்து விடுகிறார்.. கைகுழந்தையாய் நிலா அழும் காட்சியில், குழந்தை அழுதால் என்ன செய்வதென்று அப்பாவியாய் கிருஷ்ணா கேட்கும் காட்சியில், 'வெண்ணிலவே' என்று நா.முத்து குமாரின் வரிகளில், ஜி.வி.பிரகாஷின் குரலில் தொடங்கும் அந்தப் பாடல், துணையை இழந்து தவிக்கும் ஒரு உள்ளத்தின் அழுகுரலாய் எதிரொலிக்கிறது.. நிலாவிற்கு காலணி வாங்க கிருஷ்ணா மற்றும் நண்பர்கள் செய்யும் கலாட்டாக்கள் மத்தாப்பு ரகம்.. கடைக்காரரிடம் கொடுக்க பணம் குறைய, நண்பர்கள் படை தங்களிடம் இருப்பதை சேர்த்துக் கடைக்காரரிடம் கொடுப்பது மனதில பூச்சாரலைத் தூவுகிறது.. பின்னர் வளிக்கூண்டுகளை கைகளில் பிடித்துக் கொண்டு அவர்கள் அனைவரும் நடந்து செல்வது, தேவதைகளின் அணிவகுப்பு.. நிலா பள்ளியிலிர்ந்து வீடு திரும்ப தாமதமாக, கிருஷ்ணா பதறி எங்கெங்கோ அலைந்து கடைசியில் நிலாவைக் கண்டு தன் பரிதவிப்பை வெளிப்படுத்தியதும், நிலா தன் தந்தையிடம் தன்னிடம் பேச நினைப்பதை வானின் நிலாவிடம் கூறுமாறும், அந்நிலா தன்னிடம் அதை கூறிவிடும் என்று வாஞ்சையுடன் கூறும் காட்சி கொஹினூர் வைரம்.. கடைசியில் வரும் அந்த நீதிமன்ற காட்சியில், வார்த்தைகளை பிரயோகிக்காமல் வெறும் சைகைகளையும், இசையையும் துணை கொண்டு, இதயங்களில் கன்னக்கோலிட்டு விடுகிறது இக்கூட்டணி.. அழுத்தமான விஷயங்களை, மெல்லிய காட்சியமைப்புகளின் மூலம் லாவகமாக சொல்லிருப்பது இதயத்தின் அறைகளில் வண்ணங்களை தீட்டி விடுகிறது.. தலையில் வெகு நாட்களாய் தங்கியிருந்த ஆணவத்தை, தெய்வத் திருமகள் காலின் கீழ் போட்டு மிதித்து விட்டாள்; உடலின் அவையங்களில் ஆங்காங்கு தேங்கிப் போயிருந்த, மனிதத்தன்மைக்கு எதிரான கறைகளை கண்ணீரால் நீக்கி விட்டாள்; உலகியல் வாழ்வில், நம்மில் மறைத்து வைத்த பாசத்தின் விதையை தேடி, அதை நீரூற்றி வளர்த்து பூக்களை நமக்கு கொடுத்து விட்டாள்.. என்னால் முயன்ற வரை நான் உணர்ந்தவற்றை இங்கு பதித்திருக்கிறேன்.. மிகப்பெரிய பாதிப்பிற்குட்பட்டு நிழலா, நிஜமா என்ற போராட்டத்தில் இருக்கிறேன் இச்சமயம்.. உலகின் துன்பங்களுக்கெல்லாம் மூலமே அறிவு சார்ந்த விஷயங்கள் தான் என்று மீண்டுமொரு முறை உணர்கிறேன்.. தொலைத்த சொந்தங்களை, சிதைந்த நட்புறவை, மறந்த மனிதர்களை இன்று முதல் உயிர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.. சில சங்கடங்களை சந்தித்தே ஆக வேண்டும்.. இதயத்தில் உற்பத்தியாகும் உண்மையான அன்பிற்கு முன் இமயமும் மண்டியிடுமல்லவா?? கிருஷ்ணா வந்தாச்சு, கம்ச ந்ரகாசுர எண்ணங்கள் போயாச்சு.. பாடகனாய், தொழிலதிபனாய், நாட்டியக்காரனாய், எழுத்தாளனாய் - எதுவாகவும் இல்லாமல் மனிதனாய் முதலில் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் புதிதாய் என் வாழ்வை தொடங்குகிறேன்..

- இன்னும் துடிக்கும்..